வட கொரியாவுக்கு பிரதிநிதி குழுவை அனுப்புகிறது தென் கொரியா!

Monday, September 3rd, 2018

செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கொரிய உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியா தனது உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வட கொரியாவுக்கு அனுப்ப உள்ளது.

வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் தற்போது சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கொரிய நாடுகளுக்கிடையே உச்சி மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு இம்மாதத்தில் அந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை கவனிக்கவும், மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் முடிவு செய்வதற்காக தென்கெரியா தனது பிரதிநிதி குழுவை வடகொரியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு பிரதிநிதி குழுவை வழி நடத்தி செல்லும் தலைவரை தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தார்.

இதுகுறித்து மூன் ஜே-இன்னின் செய்தித் தொடர்பாளர் கிம் இயோங்-கியோம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே நடைபெறும் உச்சி மாநாட்டு பணிகள் குறித்து விவாதிக்க தென் கொரிய அதிபர் சார்பில் சிறப்பு பிரதிநிதி குழு வரும் புதன்கிழமை வட கொரியா செல்லவுள்ளது. ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய இந்த சிறப்பு பிரதிநிதி குழுவை தலைமையேற்று வழிநடத்த தேசிய பாதுகாப்பு அலுவலக தலைவரான சுங் இ-யோங் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பரிந்துரையை அதிபர் மூன் ஜே-இன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

இந்த சிறப்பு பிரதிநிதி குழுவில், தென் கொரியாவின் உளவுத் துறை தலைவர் சுஹ் ஹுனும் இடம்பெற்றுள்ளார் என்று கியோம் தெரிவித்தார்.

இருப்பினும், வட கொரிய அதிபரை பிரதிநிதி குழு எப்போது சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்பது குறித்த நேர விவரத்தை அவர் தெளிவாக தெரிவிக்கவில்லை.

பிரதிநிதிகள் குழுவை தலைமையேற்று நடத்தவிருக்கும் தென் கொரியா தலைமை பாதுகாப்பு ஆலோசகர் சுங் இ-யோங் வடகொரியா செல்வது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்பாக, தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே முதல் முறையாக நடைபெற்ற முதல் உச்சி மாநாட்டு பணிகளை மேற்கொள்ளவதற்காக, இதேபோன்ற ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதி குழுவை அப்போது வடகொரிய தலைநகர் பியோங்யாங்குக்கு அவர் அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

வட மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கிடையிலான முதல் முறை வரலாற்று சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள பன்முஞ்ஜோம் கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதன்பிறகு, அதே கிராமத்தில் இரு தலைவர்களும் இரண்டாவது முறையாக கடந்த மே

மாதம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி சந்திக்கும் திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

Related posts: