யேமனில் சவுதி கூட்டுப்படையினர் ஏவுகணை தாக்குதல் : பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Saturday, September 24th, 2016

யேமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசபடைக்கு ஆதரவாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் மீது வான்தாக்குதல் நடத்திவருகிறது.

இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள செங்கடல் துறைமுக நகரான ஹோடிதாவில் சவுதி கூட்டுப்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அந்த நகரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருக்கும் ஜனாதிபதி மாளிகையின் மீது போர்விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

அப்போது ஜனாதிபதி மாளிகைக்கு அருகே கூலி தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டின் மீது ஏவுகணைகள் விழுந்தன. இதில் அந்த வீடு தரைமட்டமானது. வீட்டில் இருந்த அனைவரும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த கோர சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 70 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் மீட்புபடையினர் விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமன் நாட்டில் உள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CqH-vUFXYAE5RGS

Related posts: