ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுவே காரணம் – பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என இஸ்ரேல் மக்கள் போராட்டம் !

Tuesday, November 7th, 2023

பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கண்டித்து தலைநகர் டெல் அவிவ்விலும், ஜெருசலேமில் அவரது வீட்டிற்கு முன்பும் பணயக்கைதிகளின் குடும்பத்தினர் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானதற்கும் 200 க்கும் மேற்பட்டோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதற்கும் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும், ஹமாஸ், பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்ரேல் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில், 64% பேர் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்

மேலும் இஸ்ரேலியர்களில் 76% பேர் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியிருப்பதாக அது தெரிவித்துள்ளது. தவிர, இஸ்ரேலியர்களில் 44% பேர் ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகு மீது குற்றம்சாட்டியுள்ளனர், 33% பேர் இராணுவத் தளபதி மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீதும், 5% பேர் பாதுகாப்பு அமைச்சரையும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: