நேபாளம் மற்றும் மலேசியா இடையே புதிய ஒப்பந்தம்!

Thursday, November 1st, 2018

மலேசியாவில் பணியாற்ற செல்லும் நேபாள் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள் தொழில்துறை அமைச்சர் கோகர்னா பிஸ்தா மற்றும் மலேசியாவின் மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் தலைமையில் கையெழுத்தான இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ், மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நேபாள் தொழிலாளர்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என தெரியவந்துள்ளது.

விமானக் கட்டணம், விசா கட்டணம், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அத்தனைக்கும் ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்தும் மலேசிய நிறுவனமே பொறுப்பெடுக்க வேண்டும்.

கூடுதலாக, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தரையிறங்கும் தொழிலாளிகளை 6 மணிநேரத்துக்குள் தங்கள் இடத்துக்கு குறிப்பிட்ட நிறுவனம் அழைத்து செல்ல வேண்டும்.

அதேசமயம், ஒப்பந்த தொழிலின் கால எல்லை 3 ஆண்டிலிருந்து 2 ஆண்டுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர்களின் மாத சம்பளத்தை 7ஆம் திகதிக்குள் நிறுவனம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

போனஸ் மற்றும் அதிக நேரம் பணியாற்றுவதற்கான தொகை மலேசிய அரசு நிர்ணயித்துள்ள தொகையை காட்டிலும் குறைந்ததாக இருக்கக்கூடாது. தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.

முன்னதாக ஜூலை 2018ல், மலேசியா செல்லும் நேபாள் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் தேவையற்ற நடைமுறைகள் மீது அதிருப்தி கொண்ட நேபாள் அரசாங்கம் மலேசியாவுக்கு தொழிலாளர்கள் செல்வதற்கு அதிரடியாக தடை விதித்திருந்தது.

தனியார் நிறுவனங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் இத்தடைக்கு காரணமாக கூறப்பட்டது. நேபாளம், மலேசியாவுகக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் முதன்மையான இடத்தைக் கொண்டிருக்கின்றது.

இன்றைய நிலையில், மலேசியாவின் தோட்டத்தொழில், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 5 லட்சம் நேபாளிய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் காவல் காக்கும் பணியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் நேபாளிகள் வேலை செய்கின்றனர்.

Related posts: