மலேஷிய படகு விபத்து 14 சடலங்கள் மீட்பு!

Tuesday, July 26th, 2016

மலேஷியாவின் தெற்குப் பகுதி மாநிலமான ஜோஹோரின் கரையோரப் பகுதியில், கடந்த வாரயிறுதியில் கவிழ்ந்த படகிலிருந்து, இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ளதாக மலேஷிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

குறித்த படகில் 62 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், இன்னும் 12 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இந்தப் படகில் பயணித்த அனைவருமே, இந்தோனேஷியாவைச் சேர்ந்த சட்டரீதியற்ற குடிபெயர்வாளர்கள் எனக் கருதப்படுவதோடு, கடந்த சனிக்கிழமை இரவு, கடுமையான அலைகள் காரணமாக படகு கவிழ்ந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் படகில் பயணித்தோரில் 34 பேர், இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் குடிவரவு அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி செய்தியொன்றை வெளியிட்டுள்ள வெளிநாட்டு ஊடகங்கள், குறித்த இந்தோனேஷியர்கள், தேவையான ஆவணங்களின்றிப் பயணம் செய்தமையின் காரணமாக, அவர்களை நாட்டுக்குத் திரும்ப அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அத்தோடு, இது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜோஹோர் மாநிலமானது நீண்ட கரையோரத்தைக் கொண்டது என்பதோடு, இந்தோனேஷிய கடல் எல்லைக்கு அருகில் காணப்படுகிறது. எனவே, சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இலகுவாக வந்தடையக்கூடிய மாநிலமாகக் கருதப்படுகின்றது.

சுமார் 2 மில்லியன் இந்தோனேஷியர்கள் – அவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் – தற்போது மலேஷியாவில் வாழ்கிறார்கள். அவர்கள் பொதுவாக, கடினமான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: