ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டார்: அமெரிக்கா தகவல்!

Saturday, February 27th, 2021

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார்.
அப்போது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை சவுதி அரேபிய அரசு தான் திட்டமிட்டு செய்ததாக துருக்கி குற்றம் சாட்டியதுடன் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது.
மேலும் ஜமால் கஷோக்கி கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் உத்தரவிட்டார் என்றும் துருக்கி தெரிவித்திருந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கையிலும் சவுதி இளவரசரே உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக அமெரிக்கா எதிர்மறையான போலியான ஏற்கமுடியாத அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் முடிவும் ஏற்கத்தக்கது அல்ல என்று சவுதி அரேபிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: