சுழல் ஜாம்பவானுக்கு இலங்கை, இந்திய வீரர்கள் அஞ்சலி!

Saturday, March 5th, 2022

அவுஸ்திரேலியாவை சேர்ந்த சுழல் ஜாம்பவானான ஷேன் வோர்னிவின் இறப்பு செய்தியால் கிரிக்கெட் உலகமே உறைந்து நிற்கிறது. அவுஸ்திரேலியாவை தாண்டி ஒட்டுமொத்த உலகமுமே வோர்னினின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

குறிப்பாக, கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கும் இந்திய ரசிகர்கள் மத்தியிலிருந்து உருக்கமான இரங்கல் குறிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று போட்டி ஆரம்பமாகும் போது இரு அணி வீரர்களும் மறைந்த சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்னுக்கு மௌன அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

மேலும், இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டி அணிந்து விளையாடி வருகின்றனர்.

ஷேன் வோர்ன் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே 708 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தவர் வோர்ன்தான். அதன் பிறகுதான், முத்தையா முரளிதரன் அந்த சாதனையை முறியடித்தார். தான் ஆடிக்கொண்டிருந்த காலம் முழுக்க ஆகச்சிறந்த வீரராக திகழ்ந்த ஷேன் வோர்னின் அறிமுகம் இந்தியாவிற்கு எதிராகவே நிகழ்ந்திருந்தது.

1991ல் இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அந்த தொடரில் சிட்னியில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே ஷேன் வோர்ன் அவுஸ்திரேலிய அணிக்கு அறிமுகமாகியிருந்தார். அந்த போட்டியில் ரவி சாஸ்திரியின் விக்கெட்டை மட்டுமே ஷேன் வோர்ன் வீழ்த்தியிருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் முதல் விக்கெட் இதுவே. ஆனாலும், அந்த அறிமுக டெஸ்ட் வோர்னுக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கவில்லை.

ரவி சாஸ்திரி அந்த போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தார். சச்சின் சதம் அடித்திருந்தார். போட்டி சமனிலையில் முடிந்தது. அதிக ஓட்டங்களை வாரிக்கொடுத்து சொதப்பியதால் ஷேன் வோர்ன் அடுத்தடுத்த போட்டிகளில் ட்ராப் செய்யப்பட்டார். ஆனால், மீண்டு வந்தார். இரண்டே ஆண்டுகளில் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தை ஆஷஸில் மைக் கேட்டிங்கிற்கு எதிராக வீசி அசரடித்தார்.

உலகம் முழுவதும் ஷேன் வோர்ன் கலக்கியிருந்தாலும் இந்தியாவில் அவ்வளவு சிறப்பாக வீசியிருக்கவில்லை. குறிப்பாக, சச்சின் டெண்டுல்கர் Vs ஷேன் வோர்ன் போட்டி எப்போதுமே சுவாரஸ்யமளிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. இந்த போட்டியில் சச்சின் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாகவே 4 முறைதான் சச்சினை வோர்ன் வீழ்த்தியிருக்கிறார். ஆனால், சச்சின் ஒவ்வொரு முறை வோர்னை எதிர்கொள்ளும் போதுமே ஒரு உச்சபட்ச ஜாக்கிரதையுணர்வுடனே ஆடியிருந்தார். ஒவ்வொரு முறை வோர்னை எதிர்கொள்வதற்கும் பிரத்யேகமான பயிற்சிகளை எடுத்துக் கொண்டே களமிறங்கியிருந்தார்.

மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சினும் வோர்னும் வீரியமான போட்டியாளர்களாக இருந்தாலும் மைதானத்திற்கு வெளியே நல்ல நண்பர்களாகவே இருந்திருக்கின்றனர். டுஉங்கள் தலைமுறையில் நீங்கள் சந்தித்த மிகச்சிறந்த வீரர் யார்?டு என கேள்வி எழுப்பப்பட்ட போது, சச்சின் மற்றும் ப்ரையன் லாராவின் பெயரையே வோர்ன் குறிப்பிட்டார். மேலும், இவர்கள் இருவரையும் தான் ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும் போதும் என்னை விட அவர்களே மிகச்சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர் என்றும் வெளிப்படையாக புன்னகையோடு பேசியிருப்பார்.

2014-15 அந்த சமயத்தில் கிரிக்கெட் ஆல் ஸ்டார் லீக் என ஒரு தொடர் அமெரிக்காவில் நடந்தது. அப்போது சச்சினுக்கும் வோர்னுக்கும் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்த சமயத்தை பயன்படுத்தி இருவருக்கும் இடையே விரிசலை அதிகப்படுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டதாகவும் வார்னே தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பார். அந்த சூழ்ச்சிகளையெல்லாம் கடந்து இந்நாள் வரைக்குமே வோர்ன் சச்சினுடன் நல்ல நட்பையே பேணி வந்தார்.

இன்றைக்கு இந்தியாவில் ஐ.பி.எல் என்பது மிகப்பெரிய விஷயமாக உருவெடுத்து நிற்கிறது. இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் சீசனை ராஜஸ்தான் அணிக்காக வென்று கொடுத்ததும் ஷேன் வோர்ன் ஆகும். மற்ற அணிகளை விட ஸ்டார் வீரர்கள் குறைவாக இருந்த அண்டர்டாக் என அறியப்பட்ட ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்து ஷேன் வோர்ன் கோப்பையை வென்றது இன்றைக்கும் ஆச்சர்யமான விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. வோர்னுக்கு பிறகு எத்தனையோ சூப்பர் ஸ்டார் வீரர்களை கொண்ட அணியாக ராஜஸ்தான் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவர்களால் அதன்பிறகு ஐ.பி.எல் கோப்பையை வெல்லவே முடியவில்லை.

000

Related posts: