கால்ப் பந்தாட்டத் தொடர் – அர்ஜெண்டினாவை வீழ்த்தியது கொலம்பியா அணி!

Tuesday, June 18th, 2019

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 2-0 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

பிரேசில் நாட்டில் 46ஆவது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. 14 முறை சாம்பியனான லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, கொலம்பியா அணியை எதிர்கொண்டது.

அர்ஜெண்டினா அணி பந்தை கட்டுப்படுத்துவதிலும், இலக்கை நோக்கி ஷாட்டுகள் அடிப்பதிலும் கவனம் செலுத்தியது. ஆனால், கொலம்பியா அணியின் தடுப்பு அரணை மெஸ்சி-செர்ஜியோ அகுரோ கூட்டணியால் உடைக்க முடியவில்லை.

எனினும், அர்ஜெண்டினாவுக்கு 66வது நிமிடத்தில் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி துரிதமாக செயல்பட்டு தலையால் முட்டிய பந்து, கம்பத்திற்கு வெளியே சென்று விட்டது. அதே சமயம் தாக்குதல் ஆட்டத்தில் கொலம்பியா வீரர்கள் ஈடுபட்டனர்.

ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் அந்த அணியின் ரோஜர் மார்ட்டினஸ், 86வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய துவன் ஜபட்டா ஆகியோர் கொலம்பியா சார்பில் கோல் போட்டனர்.

இறுதிவரை அர்ஜெண்டினாவால் கோல் அடிக்க முடியாததால், 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக கொலம்பியா அணி தற்போது அர்ஜெண்டினாவை வீழ்த்தியுள்ளது.

தோல்வி குறித்து அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்சி கூறுகையில், ‘நாங்கள் சிறப்பாக விளையாடிய போதிலும் எதிரணி கோல் அடித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் நேரம் பிடிக்கும்.

ஆனாலும் இந்த ஆட்டத்தில் இருந்து சாதகமான அம்சங்களை எடுத்துக் கொண்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த முயற்சிப்போம். அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் நிறைய வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Related posts: