ஐ.பி.எல். தொடர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது குஜராத்

Monday, April 25th, 2016

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல் தொடரின் 19வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் வாட்ஸன் களமிறங்கினர்.

6 பந்துகளை சந்தித்து 6 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் குல்கர்ணி பந்து வீச்சில் ஜடேஜாவிடம் தமது விக்கெட்டை இழந்து வெளியேறினார் வாட்ஸன்.

இதனையடுத்து விராட் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் 16 பந்துகளை சந்தித்து 20 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தாம்பே பந்து வீச்சில் ரெய்னாவிடம் தமது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்தது. கோஹ்லி ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்கள் எடுத்தார். ராகுல் அரைசதம் கடந்து 51 ஓட்டங்கள் எடுத்தார்.

குஜராத் அணி சார்பாக தாம்பே மற்றும் குல்கர்ணி தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 181 ஓட்டங்களுடன் களமிறங்கிய குஜராத் அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய டுவைன் ஸ்மித் 32 ஓட்டங்களும், பிரெண்டன் மெக்கல்லம் 42 ஓட்டங்களும் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா 28 ஓட்டங்களும், ஜடேஜா 12 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டமிழக்காமல் தினேஷ் கார்த்திக் 50 ஓட்டங்கள் எடுத்தார்.

பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts: