உலக கரம் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டு!

கடந்த 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பிரித்தானியாவின் பர்மிங்காமில் நடந்த 7ஆவது உலக கரம் சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை கரம் அணி மற்றும் அணியின் பயிற்சியாளர்களை பாராட்டும் விதமாக கொழும்பு விளையாட்டுதுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் விஷேட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உலக கரம் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை கெரம் வீரர்கள், இலங்கை கெரம் சம்மேளன தலைவர், செயலாளர் உட்பட அதன் அங்கத்தவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இலங்கை கரம் வீரர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், வெற்றி பெற்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் குறிப்பிட்ட உதவி தொகையினை வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும், அது வீரர்கள் தமது திறமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த கெரம் உலக சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான இறுதிச் சுற்றில் இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. அதேநேரம், மகளிர் அணி இரண்டாம் இடத்தை பெற்றது. தனிநபர் பிரிவில் நிஷாந்த பெர்னாண்டோ இந்திய வீரர் சந்தீப்பை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை பெற்றார்.
இலங்கை ஆடவர் கரம் அணியின் தலைவர் சமில் குரே கருத்து தெரிவிக்கையில், ”கடந்த தடவையை விட இம்முறை கடும் போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் ஆண்களுக்கான இறுதி சுற்றில் இலங்கை அணி வலிமை மிக்க இந்திய அணியை திறமையாக எதிர் கொண்டு 2- -1 என்ற கணக்கில் வீழ்த்தியது மகிழ்ச்சியை தருகிறது” என்று தெரிவித்தார்.
Related posts:
|
|