தடை செய்யப்பட்ட வீரர் இன்று கிரிக்கெட் அமைப்பின் தலைவர்!

Sunday, September 29th, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதீன், ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டில், இந்திய கிரிக்கெட் வீரர் அசாருதீன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் கிரிக்கெட்டில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தை நாடி தடையை உடைத்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, மொராதாபாத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் அரசியல் அதிக ஈடுபடாத அசாருதீன், கடந்த வாரம் ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மனு அளித்தார். அவருக்கு போட்டியாக பிரகாஷ் சந்த் ஜெயின் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் தேர்தலின் முடிவுகள் வெளியானது. பிரகாஷ் 73 வாக்குகள் பெற்ற நிலையில், அசாருதீன் 173 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். கிரிக்கெட்டில் பல்வேறு தடைகளை தாண்டிய அசாருதீனுக்கு இந்த வெற்றி அவரது வாழ்வில் முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அசாருதீன் பல சாதனைகளை படைத்திருக்கிறார். இந்திய அணியை மூன்று உலகக் கிண்ணத் தொடர்களில் வழி நடத்திய ஒரே தலைவர் என்ற சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார். 338 ஒருநாள் போட்டிகளில் 9,378 ஓட்டங்களும், 99 டெஸ்ட் போட்டிகளில் 6,216 ஓட்டங்களும் அசாருதீன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: