சுவரை பிளந்து கொண்டு சாலைக்குள் புகுந்த போயிங்!

Saturday, August 6th, 2016

இத்தாலி நாட்டில் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் ஓடுபாதையில் இறங்கியபோது மதில் சுவரை உடைத்துக் கொண்டு சாலைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து இத்தாலியின் லொம்பார்டி மாகாணத்தில் உள்ள பெர்கமோ நகரை நோக்கி நேற்று தனியாருக்கு சொந்தமான ‘போயிங் 737-400’ ரக விமானம் வந்து கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 4.07 மணியளவில் பெர்கமோ நகரில் உள்ள ஓரியோ அல் செரியோ விமான நிலயத்தில் தரையிறங்கிய அந்த விமானம், ஓடுபாதையில் சென்றபோது பக்கவாட்டில் இருந்த மதில் சுவரை உடைத்துகொண்டு சாலையின் குறுக்கே வந்து நின்றது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்தவர்கள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஓரியோ அல் செரியோ விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் மிலன் நகரில் உள்ள மல்பேன்ஸா விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. பின்னர், காலை சுமார் 7 மணியளவில் ஓரியோ அல் செரியோ விமான நிலையத்தில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக இந்த விமான நிலையத்தை நிர்வகித்துவரும் சாக்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts: