40 வருட காலத்திற்கும் மேல் திருத்தப்படாத ஊரெழு சங்க வீதி !

Tuesday, September 12th, 2017

வலி.கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட யாழ் .ஊரெழு மேற்குச் சங்க வீதி கடந்த-40 வருட காலமாகப் புனரமைக்கப்படாமையால் பெரும் சேதங்களுக்குள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

ஒரு கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி பலாலி வீதியையும், சுன்னாகம்-புத்தூர் வீதியையும் இணைக்கும் முக்கிய கிளை வீதியாக அமைந்துள்ளது.  வெயில் காலங்களில் இந்த வீதியால் வாகனங்கள் செல்வதால் புழுதிகள் பெருமளவில் வீடுகளுக்குள் செல்கின்றன. இதனால், தாமும், தமது பிள்ளைகளும் அடிக்கடி நோய்வாய்ப்பட வேண்டியுள்ளதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சாதாரண மழை காலங்களில் கூட இந்த வீதியில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுவதால் போக்குவரத்துச் செய்யும் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.  குறித்த வீதியைப் புனரமைத்துத் தருமாறு தாம் பல்வேறு தடவைகள் வலி.கிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள போதிலும் பிரதேச சபையினர் இதுவரை வீதியைப் புனரமைக்க எதுவித நடவடிக்கைகளும் எனக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் வீதியின் நிலையைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் மாரி காலத்திற்கு முன்னர் இந்த வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts: