37 வருடங்கள் கடந்துவிட்ட தமிழினத்தின் பெருந்துயரம்!..

Friday, June 1st, 2018

1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு 37 ஆண்டுகள் விடைபெற்றுச் சென்றுவிட்டன.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றதுதான் இந்த யாழ் நூலகம்.

அதன் பெயரும் சிறப்பும் உலகெங்கும் பிரகாசமானதால் 1981 யூன் 1 இல் திட்டமிடப்பட்ட வகையில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டது என்றே வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

கே.எம்.செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் நடத்தி வந்த நூல் நிலையமே பின்னாளில் உலகப் புகழ் பெற்ற யாழ் நூலகமாய் பரிணமித்தது.

கே.எம்.செல்லப்பா தனது வீட்டில் ஆரம்பித்த இந்த நூலகத்தை பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு எடுத்து அங்கு இதை நகரச் செய்தனர்.

1936 க்குப் பின்னர், அது யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, அன்று புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டு நூலகத்திற்கு நிர்வாக புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக் கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் இதற்காக அமைக்கப்பட்டது.

இதன் பயனாக நூலக கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை வடிவமைத்தார் அந்த தமிழ் நாட்டு கட்டடநிபுணர். இவ்வாறு வளர்ந்து உச்சம் பெற்றதுதான் இந்த யாழ் நூலகம்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாக பதியப்பட்டுவிட்டது.

இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் திட்டமிட்ட சதியாக இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும். இது 20ஆம் நூற்றாண்டின் அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ் அழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது என்று வரலாறு சொல்கிறது.

இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர் என்றும் செய்திகள் சொல்லியதுண்டு.

நூலகம் எரிக்கப்பட்டதானது தமிழ் மக்கள் மத்தியில் என்றும் அழியாத காயம் ஒன்றை ஏற்படுத்தியது மட்டுமல்லாது  தமிழ்  இளைஞர்களை ஆயுதம் ஏந்தும் அளவுக்கு உரம் ஊட்டியது என்பதும் வரலாற்றுப்பதிவு.

அழிந்து போனது அறிவுப் பொக்கிசம் மட்டுமல்ல பலரது உயிர்களும்தான்.

அறிவுக்களஞ்சியம் தீயில் நீறாகிப் போன அந்த துயரச் செய்தியைக் கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞர் வண.டேவிட் அடிகள்.

நீறாகிப்போன நூலகத்தின் செய்திகேட்டு தமிழ் நாட்டின் புகழ் பூத்த எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் ஒரு இலட்சம் புத்தகங்கள் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதி தனது கவலையை வெளிப்படுத்தினார்.

“நேற்று என் கனவில்

புத்த பெருமான்

சுடப்பட்டு இறந்தார்.

சிவில் உடை அணிந்த

அரச காவலர்கள்

அவரை கொன்றனர்.

யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே

அவரது சடலம் குருதியில் கிடந்தது”.

இப்படி தனது துயரத்தை கவிதையில் வடித்தார் போராசிரியர் நுகுமான்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றையும் எழுதியிருந்தார்

யாழ் நூலகத்தின் வரலாறு, அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்.

இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின என எம் தேச வரலாறு பதிவிடுகின்றது.

ஆனாலும் எரிந்து கிடந்த எம்தேச அறிவுப் பொக்கிஷத்தை மீண்டும் அறிவுப் பொக்கிஷமாக மாற்றவேண்டும் என அன்று புனர்வாழ்வு அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பெரும் முயற்சி செய்தார்.

இதற்கு இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு அது அழிவுச் சின்னமாகவே இருக்கவேண்டும் என பிரசாரம் செய்தனர்.

ஆனாலும் டக்ளஸ் தேவானந்தா என்ற தனி மனிதன் தனது தற்துணிவுடன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் தகர்த்து எம் தேசத்தின் அறிவுப் பொக்கிஷத்தை மீண்டும்  எம் தேசத்தில் மீள் ஒளிரச் செய்தார்.

கல்விப் பொக்கிம் மட்டுமல்ல எம்மினத்தின் கலாசாரமும் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என  நூலகத்தின் அருகே தமிழர் கலாசாரத்தை மிளிரவைப்பதற்கென ஒரு கலாசார மண்டபத்தையும் உருவாக்க முயற்சி செய்தார்.

அவரது அயரா முயற்சிக்கு இந்திய தேசம் கரங்கொடுத்தது. அதன் பெறுபேறாகத்தான் இன்று நூலகம் அருகே அமையப்பெறும் கலாசார மண்டபம் காணப்படுகின்றது.

இவ்வாறு புத்துயிர் பெற்று கம்பீரமாய் யாழ் நூலகம் காட்சியளிக்கின்றபோதும் அது எரிந்துபோன பல நூல்களையும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளையும், ஏட்டுச் சுவடிகளையும் இன்னும் பல ஆவணங்களும் தன்னால் திரும்பவும் பெறமுடியவில்லை என்ற வேதனையுடனேயே இன்றும் தவிக்கின்றது.

Related posts: