வேலணை பிரதேசத்திற்கு நிரந்தர கால்நடை வைத்திய அதிகாரி தேவை – மக்கள் கோரிக்கை!

Saturday, March 24th, 2018

தீவகப் பகுதியின் முக்கிய பிரதேசமான வேலணை பிரதேசத்தில்  மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக கால்நடை வளர்ப்பு இருந்துவரும் நிலையில் அப்பகுதிக்கென ஒரு கால்நடை வைத்திய அதிகாரி இன்மையால் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் உள்ள காலநிலை மாற்றத்தால் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் பகுதிகளில் தீவகப் பகுதியும் ஒன்றாக காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் வெப்பம் காரணமாகவும் இதர கிருமித் தொற்றுக்கள் காரணமாகவும் கால்நடைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை, மற்றும் கோழி போன்றவற்றிற்கு ஏற்படும் நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனைவிட வெப்பம் காரணமாக விலங்குகளுக்கு நீர் வெறுப்பு நோய்களும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதால் அவற்றுக்கு தடுப்பு ஊசிகள் போடுவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன் அது தொடர்பான விழிப்புணர்வுகளும் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சமூக நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வேலணை பகுதியில் கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் பதிலீடாக வாரம் ஒருதடவை வந்து சிகிச்சை வழங்கும் நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக விலங்குகளுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டாலோ அன்றி ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்கோ கால்நடை வைத்தியர் இன்மையால் பிராணிகள் இறக்க நேரிடுகின்றது.

இதன்காரணமாக குறித்த ஆடு மாடு போன்ற பிராணிகளை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக இழக்கப்படும் நிலை தோன்றுகின்றது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதுடன் வேலணை பிரதேசத்திற்கென ஒரு நிரந்தர மிருக வைத்திய அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: