வெளி இடங்களிலிருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு!

Sunday, May 3rd, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு மது பாவனையே முக்கிய காரணம் எனத் தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வெளியிடங்களில் இருந்து வருபவர்களை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் –

கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாடிவீட்டு தொகுதிகளில் வசிப்பவர்கள் வைரஸ் தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வெளிப் பிரதேசங்களிலுள்ள நபர்கள் தமது பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதை மக்கள் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு வருபவரை வீடுகளில் தங்கவைப்பவர்ளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குசட்டத்தை மீறுவோரை கண்காணிப்பதற்காக நாட்டில் 110 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் 14 பேர் மது பாவனைக்கு அடிமையானவர்கள். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மது பாவனையே.

அதற்கிணங்க சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிலைமையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனூடாகவே வைரஸ் தொற்று கிளைகள்உருவானது.

அரசாங்க புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கிணங்க இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி இனங்காணப்பட்டதிலிருந்து இதுவரை 31 கிளைகள் மூலமே வைரஸ் தொற்று உருவாகியுள்ளது.

இதுவரை அதில் 27 கிளைகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்கு கிளை களம் உள்ளதுடன் அதில் மூன்று கிளைகள் செயலிழக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போதைய நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுமக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்” என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: