விருப்பு வாக்கு முறையில் மாகாண சபைத் தேர்தல் ?

எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள மாகாண சபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முக்கிய கலந்துரையாடலொன்று நடத்தப்படுமென்றும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்படும்.
தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டு முறைமைகளையும் கலந்து மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் போது பாரிய குறைபாடுகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்தே விருப்பு வாக்கு முறைமையில் தேர்தலை நடத்துவதற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சப்ரகமுவ, வடமத்தி மற்றும் கிழக்கு ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து சில மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் சில மாதங்களில் வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலங்களும் நிறைவடையவுள்ளன.
தொகுதி மற்றும் விகிதாசாரம் ஆகிய இரண்டு முறைமைகளையும் கலந்தே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதென மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருப்புவாக்கு முறைமையின் பிரகாரமான பழைய முறைப்படி தேர்தலை நடத்த வேண்டுமாயின் மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தெரிய வருகிறது.
இதேவேளை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தாமல் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றியமையானது அரசமைப்புக்கு முரணானதாகும் என்று குறிப்பிட்டு அந்தச் சட்டமூலத்தை இரத்துச் செய்யுமாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதிமன்றத்தினால் கடந்த வியாழக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|