தாதியர் சேவைக்கு கலைப்பிரிவையும் உள்ளீர்ப்பதற்கு தாதியர் சங்கம் கடும் எதிர்ப்பு – இது நோயாளிகளுக்கு ஆபத்தானது எனவும் எச்சரிக்கை!

Saturday, October 10th, 2020

தாதியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதிகளைக் குறைக்க தீர்மானித்ததன் மூலம் சுகாதார அதிகாரிகள் இத்தொழிலுக்கு பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக இலங்கையின் முன்னணி தாதியர் சங்கம் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

தாதியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு செய்வதில் விஞ்ஞானப் பிரிவை மாத்திரம் அல்லாது கலைப் பிரிவிவையும் அடிப்படையாகக் கொண்டு கவனம் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கடந்த வாரம் ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச தாதியர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய சுகாதார அமைச்சரின் இக்கூற்றை கடுமையாக எதிர்ப்பதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச மற்றும் உள்நாட்டில் அங்கிகரிக்கப்பட்ட தாதியர் ஆட்சேர்ப்புத் தகுதிகளை மாற்றுவதற்கான யோசனையை உடனடியாக மீளப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தாதியர் சேவைக்கு குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்களே கிடைப்பதால், உயர் தரத்தில் கலைப் பிரிவில் கற்ற மாணவர்களை இணைத்துக்கொள்ள அரசு தீர்மானித்திருந்தாலும், தாதியர் சேவைக்கு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சுகாதார அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறுபுறம், ஆண்களை தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதை ஐந்து சதவீதமாக மாற்றியுள்ளனர். ஆகவே, இது உயர் தரத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ள விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கு அநீதியான விடயமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாதியர் சேவை எனப்படுவது விஞ்ஞானத்துடன் தொடர்புடைய சேவையே, விஞ்ஞானப் பிரிவில் கற்றவர்கள் மாத்திரமே இதனை கற்க முடியும் எனவும், மற்றவர்களை உள்ளீர்ப்பது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் எனவும் இது நோயாளிகளுக்கு ஆபத்தானது எனவும் தொழிற்சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: