வித்தியா படுகொலை: சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு பாதிப்பு – நீதிபதி இளஞ்செழியன்!

Monday, October 2nd, 2017

வித்தியா மோசமான நிலையில் படுகொலை செய்யப்பட்டமையானது, சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மாணவி ஒருவரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் கௌரவத்திற்கும் அங்கு வாழும் இலங்கையர்களின் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நீதிபதி இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மாணவியை துன்புறுத்தும் சதித்திட்டம் சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டதாக வழக்கு விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டது.

சுவிட்சர்லாந்து இரண்டு உலகப் போரின் போதும் நடு நிலைமை வகித்த ஒரு நாடாகும். ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை ஜெனிவாவில் அந்த நாடு கொண்டிருக்கின்றது.இவ்வாறான நிலையில் வித்தியா தொடர்பான வழக்கு விசாரணையில் தெரியவந்த விடங்கள் சுவிட்சர்லாந்தின் கௌரவத்தை பாதிப்படையச் செய்துள்ளது.

முக்கியமாக சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களின் மதிப்பையும் கௌரவத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது எனவே, சர்வதேச ரீதியாகக் கவனத்தைத் திருப்பிய இந்தக்குற்றச் செயலுக்கு சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தனது தனி தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயனத்தினால் 7 பேர் குற்றவாளிகள் என்று ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.7 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் மேலும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்டவராகிய வித்தியாவின் குடும்பத்தினருக்கு 70 இலட்சம் நட்டஈடாகவும் வழங்க உத்தரவிடப்பட்டது.

அரச தண்டப்பணமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் குற்றவாளிகள் செலுத்த வேண்டும் என 3 நீதிபதிகளும் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்ட 9 பேரில் 7 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டதுடன், 3 நீதிபதிகளும் ஏனைய 2 பேரையும் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டனர்.

ஏழு குற்றவாளிகளில் பிரதான நபராக சுவிஸ் நாட்டை சேர்ந்த சுவிஸ்குமார் என்பவர் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்னர் கோரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்.வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தினால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: