வித்தியா கொலை வழக்கு: மரபணு சோதனை அறிக்கை ‎மன்றில் சமர்ப்பிப்பு!

Wednesday, May 18th, 2016

மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஒருவருடம் கடந்த பின் குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதேவேளை, பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிச்சென்றமை உட்பட ஏனைய விசாரணை அறிக்கைகளை அடுத்த வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைகள் 2 தடவைகளாக இடம்பெற்று வந்தன. அதாவது முதலில் கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களுக்கான விசாரணை ஒரு திகதியிலும் பின்னர் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை பிறிதொரு திகதியிலும் இடம்பெற்று வந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் இரு வழக்கு விசாரணைகளும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: