வாகனங்களின் பதிவுகளை மாற்றிக் கொள்ளாமல் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு!

Wednesday, August 24th, 2016

வாகனங்களின் உரிமையை சரியான முறையில் மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் தற்போதைய உரிமையாளர்கள், தமது வாகனங்களை தமது பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்கான சலுகைக் காலம் வழங்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி கூறினார்.

வாகனங்களின் ஆரம்ப உரிமையாளரிடமிருந்து சரியான முறையில் உரிமை மாற்றப்படாமையின் காரணமாக வாகன விபத்துக்களின் போது பல்வேறு குழப்படிகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற வாகனங்கள் தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதால், அந்த சந்தர்ப்பங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை குறைப்பதற்கு இதனூடாக முடியும் என்று ஜகத் சந்திரசிறி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தாமதக் கட்டணம் அறவிடப்படாமல் சட்ட ரீதியாக செலுத்தப்பட வேண்டிய கட்டணத்தை மாத்திரம் செலுத்தி வாகன உரிமையை பாவனையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அதன் பின்னரும் சட்டமுறைப்படி வாகனங்களின் உரிமையை மாற்றாது பயன்படுத்தும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: