சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காது – அமைச்சர் அமரவீர எதிர்வுகூறல்!

Sunday, May 29th, 2022

எதிர்வரும் சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்கப்பெறாது எனவும் உரத்தைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலவுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சிறுபோக பயிர்ச்செய்கைக்கான உர விநியோகம் தொடர்பில் கருத்து வினவப்பட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர – தற்போதைய நிலையில் பணம் கொடுத்தாலும் உரம் வழங்க எந்த நாடும் தயாராக இல்லை. ஏனெனில் உலகளாவிய உணவுப் பஞ்சம் ஒன்றைக் குறித்த எதிர்வு கூறல் காரணமாக எந்த நாடும் உரம் விற்பனை செய்ய தயக்கம் காட்டுகின்றன.

இந்தியாவில் இருந்து நாம் உரம் பெற்றுக்கொள்வதாயினும் இந்தியாவும் வேறு நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்து நமக்கு வழங்க வேண்டியுள்ளது.

எனவே தற்போதைக்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் போது உரம் வழங்குவதற்கான உறுதிமொழியை வழங்க முடியாதுள்ளது. ஆயினும் பெரும்போக பயிர்ச் செய்கைக்காவது தட்டுப்பாடின்றி உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை இப்போதே நாம் முன்னெடுக்கின்றோம்.

எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு உணவுப் பொருட்கள் பயிரிடப்படுவதன் மூலமாக மட்டுமே நம் நாட்டில் ஓரளவுக்கேனும் உணவுப்பஞ்சம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

000

Related posts: