வடமராட்சியில் மின் கம்பத்தை சீரமைத்த ஊழியர் மின்கம்பம் விழுந்து பலி!

Saturday, April 6th, 2019

விபத்தின் போது முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று (5) மாலை இடம்பெற்றது.

துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் (வயது- 51) என்ற குடும்பத் தலைவரே உயிரிழந்தார்.

கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக லொறி ஒன்றும் கார் ஒன்றும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளன. வளைவு ஒன்றில் திரும்பும்போது, வீதியோரமாக நடப்பட்டிருந்த மின்சார, தொலைபேசி கம்பத்தில் லொறி மோதி விபத்திற்குள்ளானது.

இதில் கம்பங்கள் முறிந்து லொறியின் மீது சாய்ந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பில் மின்சார சபை மற்றும் சிறிலங்கா ரெலிக்கொம் என்பவற்றுக்கு நெல்லியடி பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மின்கம்பத்தை அகற்ற பணியாளர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

மின்கம்பத்தை அகற்ற முற்பட்ட சமயத்தில், விபத்திற்குள்ளான லொறியை சாரதி இயக்கினார். இதன்போது, லொறியில் சாய்ந்திருந்த மின் கம்பம் மின்சாரசபை ஊழியரின் தலை மீது விழுந்தது.

இதனால் மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார சபை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு அங்கிகள் எவற்றையும் அணிந்திருக்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கையாக இல்லாது கம்பத்தை அகற்றி மின் விநியோகத்தை சீர் செய்வதற்காக தயார் நிலையில் இருந்த போதே இச் சம்பவம் இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: