வடக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபை தன்னிச்சையான செயற்படுகிறது – குற்றம் சுமத்துகின்றது தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம்!

Thursday, April 4th, 2019

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து அதிகார சபையின் தன்னிச்சையான செயற்பாட்டால், வடக்கு மாகாணத்திலுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படடு வருகின்றனர் என்று முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

2018 இல் போக்குவரத்து அதிகார சபையின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக நான்கு நாள் பணிப்புறக்கணிப்பு நடத்தி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அரச அலுவல்கள் மற்றும் வெளிநாட்டுக்குடியுரிமை உள்ள பேருந்து உரிமையாளருக்கு வழங்கப்பட்ட வழி அனுமதிப்பத்திரங்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறிய நிலையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிநாட்டுக் குடியுரிமையாளருக்கு வழி அனுமதிப்பத்திரம் வளங்கியுள்ளார்கள்.

வழி அனுமதிப்பத்திரக் கட்டணம் 7 ஆயிரத்து 500 ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாகவும்;, லொக் சீற் காட் 750 ரூபாவிலிருந்து  500 ரூபாவாகக் குறைக்க வேண்டும்  என்று எடுக்கப்பட்ட தீர்மானம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கோப்பப்பிலவு மக்களுக்கு போக்குவரத்து வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. முல்லைத்தீவு, மன்னாருக்கான பேருந்து வழி அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தைத் தாண்டி இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகள் கிராமங்களுக்குச் செல்வது நிறுத்தப்பட வேண்டும்.

வழி அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களின் அடிப்படையில் பேருந்துகள் பணியில் ஈடுபட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுவரை அவை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் பேருந்துப்பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளோம்.

இதனைக் கவனத்தில் எடுத்து தீர்வைப் பெற்றுத் தருமாறு கடந்த 31 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனைச் சந்தித்துக் கடிதம் வழங்கினோம். இது தொடர்பில் ஒரு சில நடைமுறைகளை கொண்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார்.

தற்போதும் வடக்கு மாகாணப் போக்குவரத்து அதிகார சபை சில தன்னிச்சையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இனியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனின், போராட்டம் தான் என்று முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts:


இரணைதீவிற்கு மீள் குடியேற்ற அமைச்சின் உதவிச் செயலாளர் வட பிராந்திய கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் ...
தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் - மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் ஆரம்பம் – ஆசனங்களுக்கு அமைவ...
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் - சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை...