வடக்கு மாகாண அமைச்சர்களது ஊழல் நிரூபணமானது – பதவி விலக பரிந்துரை!

Monday, June 5th, 2017

பல மாதங்களாக இழுபறியில் இருந்துவந்த வடக்கு மாகாணத்தின் அமைச்சர்கள் மீதான விசரணையின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி வடக்கு மாகாணத்தின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை பதவி விலகுமாறு, குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த விசாரணைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு மேற்படி பரிந்துரையை முன்வைத்துள்ளது

குறித்த விசாரணையின் பிரகாரம், மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது அதிகார வரம்பு மீறல், நிதிமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதோடு, இவர் தன்னை முதன்மைப்படுத்தி மேற்கொண்ட செயற்றிட்டங்களால் மாகாண சபையின் நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஐங்கரநேசனும் அவரது செயலாளரான பற்றிக் நிரஞ்சனும் பதவி விலக வேண்டுமென மாகாண சபைக்கு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

அத்தோடு, வடக்கு மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராசா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதோடு, கல்வியமைச்சின் செயலாளரின் அதிகாரத்தை தனது கையில் எடுத்து செயற்பட்டுள்ளார் என்றும், இடமாற்றங்களின் போது அரசியல் பலத்தை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர், அப்பாடசாலையின் அதிபரால் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல்கொடுத்த ஆசிரியரை குருகுலராசா இடமாற்றம் செய்துள்ளார். இந்நிலையில், மாகாண கல்வியமைச்சரும் அவரது செயலாளரும் உடனடியாக பதவி விலக வேண்டுமென மாகாண சபைக்கு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

Related posts: