ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Thursday, October 13th, 2022பனை அபிவிருத்தி மற்றும் அதுசார்பில் எனக்கு சிறு வயதிலேயே ஒரு ,ஈர்ப்பு இருந்தது. அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜனி திரணகம என்பவர் எழுதிய முறிந்த பனைகள் என்ற நூலை வாசித்ததே காரணம் என தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன வடக்கில் செறிந்து காணப்படும் பனைவளத்தை கொண்டு சர்வதேச அளவில் நாட்டுக்கு பொருளாதாரத்தை ஈட்டித்தரும் வகையிலான கைத்தொழிலாக அதை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை தான் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்திற்கான கட்டிடத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே பெருந்தோட்டத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது இந்த நாடினையும் மக்களையும் வழிநடத்திக்கொண்டிருக்கும் ஒரு சிரேஸ்ட தலைவரும் அமைச்சருமாவார்.
அதுமட்டுமல்லாது தற்போதைய பெருந்தோட்டத்துறை சார்ந்த அமைச்சர்களான (ரமேஸ் பத்திரன லொகான் ராதவத்த) எம்மிருவரதும் தகப்பனார்களின் நெருங்கிய நண்பனாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துள்ளார். இதனால் எமக்கு அவர் மீது நெருக்கமான உறவும் பெருமதிப்பும் இருக்கின்றது.
இதனால் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே நாம் இப்பகுதியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுத்த வருகின்றோம்.
இதேவேளை பனை தொடர்பில் 40 வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிவந்த ராஜனி திரணகம என்பவர் முறிந்த பனைகள் என்ற நூலை எழுதியிருந்தார்.
அதை நான் வாசித்திருந்தேன். இதன் காரணமாக பனை சார் தொழிற்றுறையில் எனக்கு அதிகமான ஓர் ஈர்ப்பு இருந்துவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது ரஜனி திரணகம ஒரு தமிழ் பெண்ணாக இருந்தபோதிலும் அவர் திருமணம் செய்த திரணகம என்பவர் எனது பிரதேசமான காலியை சேர்ந்தவராகவே இருந்தது.
அத்துடன் அவரது நிலைப்பாடானது வடக்கு தெற்கு என்ற பிரிவினைகள் அற்ற ஒரு தேசமாக நாம் அனைவரும் ஒரு நாட்டவர் என்பதாகவே இருந்தது.
இதேவேளை வடக்கு மகாணத்தில் ஏறத்தாள 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் பனைசார்ந்த கைத்தொழிலை மேற்கொண்டு வருவதாக துறைசார் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் பனைசார் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்தும் முகமாகவும் அதை முன்னெடுக்கும் மக்களின் நலன்களை முன்னேற்றுவதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை தூக்கி நிறுத்த புலமைப்பரிசில் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அதுமட்டுமல்லாது பனை உற்பத்திகளான கள் உற்பத்தியை அதிகரிக்கவும் அதனூடாக உற்பத்தி செய்யப்படும் சாராயம் உள்ளிட்ட இதர உற்பத்திகளை அதிகரித்து வெளிநாட்டு சந்தைத் தரத்திற்கேற்றவகையில் உற்பத்திகளை செய்து நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான கைத்தொழிலாக இத்துறையை உருவாக்க நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|