மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. – அமைச்சர் ஜனக பண்டார !

Friday, January 1st, 2021

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. அதற்கான உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் நிச்சயம் வெற்றி பெறும். ஆகவே தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளமைக்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்த நல்லாட்சி அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் தேர்தல்கள் ஏதும் பிற்போடப்படவில்லை மாறாக தேர்தல்கள் உரிய காலத்துக்கு முன்னரே நடத்தப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தோல்வியடைய கூடும் என்பதை நன்கு அறிந்தும் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. மாகாணசபை உரிமைகளை கடந்த அரசாங்கம் பாதுகாக்கவில்லை. மாகாணசபை தேர்தல் மாத்திரமல்ல தேசிய தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பத்திரம் குறித்து கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

Related posts: