இரசாயன உரம் நிறுத்தப்பட்டமை தவறு – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, April 19th, 2022

இலங்கை மிகவும் முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்க வேண்டும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமனத்தின் பின்னர் நிகழ்த்திய விசேட உரையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளுக்கு இரசாயன உரம் வழங்காதது தவறு என்றும், அரசாங்கம் மீண்டும் இரசாயன உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதுதொடர்பில் நான் மிகவும் வேதனையடைகிறேன்.

வாழ்க்கைச் செலவை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் வருத்தம், கோபம் என்பன மிகவும் நியாயமானது.

கடந்த காலங்களில் எந்த குறைபாடுகள் ஏற்பட்டிருந்த போதும் நிகழ்கால சவால்களை எதிர்கொள்வதும் சிக்கல்களை முகாமைத்துவம்  செய்வதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய எனது கடமையாகும்.

இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும். எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

நாம் எப்போதும் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மக்களிடம் யதார்த்தத்தை மறைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் பெறும் தகவல்களைப் பற்றி அறிவுபூர்வமாக விசாரித்து உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சினையை புரிந்து கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

000

Related posts: