யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு.!

Sunday, April 2nd, 2017

 

வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் பொதுமன்னிப்பு வழங்கியையடுத்துப் பல்கலைக் கழகக் கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று சனிக்கிழமை(01) காலை-09.30 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடந்த-11 ஆம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பாக 13 கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் 13 பேரும் இணைந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை(30) பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நிர்வாக அடக்கு முறைகளுக்கெதிரான சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த மாணவர்களுக்கு ஆதரவாக ஏனைய கலைப்பீட மாணவர்களும் வகுப்புக்களைப் புறக்கணித்துப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் சில மாணவர்களின் உடல்நிலையும் மோசமடைந்திருந்தது. தமக்குச் சாதகமான பதில் நிர்வாகத்தால் வழங்கப்படும் வரை தமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நேற்றைய தினம் உறுதிபடக் கூறியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் இன்றைய தினம் ஒரு சில மாணவர்கள் தவறுதலாக நடந்து கொண்டமையை ஏற்றுக் கொண்டு அதற்காக மாணவர்கள் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டது. இதனையடுத்துச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் எதுவித விசாரணையுமின்றி மீளவும் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான உறுதிமொழி பல்கலைக்கழக நிர்வாகத்தால்  எழுத்துமூலம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  நீராகாரம் அருந்தி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர்.

Related posts: