யாழ்ப்பாணத்தை வாட்டியெடுக்கும் வெப்பம் – நீருக்காக அவதியுறும் தீவகப் பிரதேச மக்கள்!

Saturday, July 28th, 2018

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் அவதியுறுவதை காணமுடிகின்றது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தின் வேலணை ஊர்காவற்றுறை நெடுந்தீவு ஆகிய தீவகப் பகுதிகளில் அண்மையகாலமாக அதிகரித்த வெப்பநிலை காணப்படுவதுடன் அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் உள்ள நீரும் முற்றாக வற்றும் நிலை உருவாகியுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதைக் காணமுடிகின்றது.

இந்நிலையால் குறித்த பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவும் அதே வேளை இதர தேவைகளுக்கான நீர் தட்டுப்பாடும் தற்போது ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையான வெயில் காரணமாக கால்நடைகளின் மேச்சல் நிலங்களும் வரண்டுள்ளதால் கால்நடைகள் ஊணவிவுக்காக அலைந்து திரிவது மட்டுமல்லாது குடிநீரும் இன்றி அல்லலுறுவதை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பகுதிகளில் குடிநீருக்கான வசதிகளை ஓரளவு பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்ற போதும் மக்களது இதர தேவைகளுக்கான நீர்த் தேவைப்பாட்டை நிவர்த்தி செய்ய இதுவரை அவர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் கால்நடைகளின் தேவைப்பாட்டுக்கான நீர் தொட்டிகளையும் தனியார் நிறுவனங்களும் பிரதேச சபையும் அதிகளவில் கண்டுகொள்வதில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் தற்போதுள்ள வெப்பமான காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தின் மையப் பகுதிகளிலுள்ள பல கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் நாட்டின் பல்வேறு பாகங்களில் தற்போது வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   அந்தவகையில் இன்று காலை 08.30 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் வெப்பநிலை வழமையைவிட 4 பாகை செல்ஸியஸ் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: