மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட விவகாரம் – சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது உடன்படிக்கை!

Sunday, March 14th, 2021

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தித் திட்டத்தை, இந்தியாவும், ஜப்பானும் பெயரிடும் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை, சட்டமா அதிபரின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர், ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்கு முனைய அபிவிருத்திக்காக, அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, அது குறித்து ஆராய்ந்த குழுவின் பரிந்துரைகளே சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழு கூடியபோது, துறைமுக அதிகார சபையின் அறிக்கையும், குறித்த நாடுகளினால் பெயரிடப்பட்ட குழுக்களின் அறிக்கையும் ஆராயப்பட்டன.

இதன்போது எமது யோசனைகள் அந்த நிறுவனங்களிடம் முன்வைக்கப்பட்டன. அதன் பின்னர் அந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் இதடிப்படையில் ஏற்பட்ட இணக்கம் தொடர்பில் ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்தவுடன், மீண்டும் அது குறித்து கலந்துரையாடி அந்த அறிக்கையை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: