மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பல குடும்பங்கள்!

Thursday, May 10th, 2018

மின்சார சிட்டைகள் பல மாதங்கள் கடந்து வழங்கப்படுவதால் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சார சிட்டைகள் பல மாதங்கள் கடந்தே வழங்கப்படுகின்றன.

இதன் காரணமாக மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் பல குடும்பங்கள் காணப்படுகின்றன. மாதந்தோறும் மின்சார சிட்டைகளை வழங்குவதன் மூலம் இலகுவாக கட்டணங்களை செலுத்த முடியும். ஆனால் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் சேர்த்து மின்சார சிட்டைகளை வழங்குவதன் காரணமாக பல குடும்பங்கள் மின் கட்டணங்களைச் செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இவற்றைக் கருத்திற்கொண்டு மின்சார சபை அதிகாரிகள் மாதந்தோறும் மின்சார சிட்டைகளை மின்சாரம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கி மின் கட்டணங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் மின்சார சபையினரிடம் வினாக்கள் எழுப்பப்பட்டபோது மின்சார சபையில் காணப்படுகின்ற ஆளணிப் பற்றாக்குறைகளே காரணமாகக் கூறப்பட்டது.

ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றபோது இவ்வாறான பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும் மாதந்தோறும் மின் கட்டணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக மின்சார சபை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

Related posts: