மினி சூறாவளியால் சிதறுண்டது பொன்னாலை!

Sunday, May 1st, 2016

பொன்னாலையில் வீசிய மினி சூறாவளியால் வீடுகள், கடை மற்றும் பொதுக் கட்டிடங்களின் கூரைகள் சேதமாகியுள்ளன. இதில் அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் வீடு ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டது.

வலி.மேற்கின் பல இடங்களில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பெரு மழை பெய்தது. இதன்போது 2.30 மணியளவில் பொன்னாலையில் மினி சூறாவளியொன்று வீசியது.

இந்த சூறாவளியால் பொன்னாலை தெற்கில் உள்ள வீட்டுக் கூரை சுழல் காற்றினால் முற்றாக தூக்கி வீசப்பட்டது. அண்மையில் வழங்கப்பட்ட இந்திய வீடே இந்த அனர்த்தத்தில் கடும் சேதமாகியது. இவ் வீட்டுக்கு அண்மையில் அமைந்திருந்த அரை நிரந்தர வீட்டின் முன் பக்க கூரையும் தூக்கி வீசப்பட்டது.

மேலும், பொன்னாலை சந்தியில் நாராயணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தொழிலாளர்களுக்கென கடந்த வருடம் அமைக்கப்பட்ட ஓய்வு மண்டப ஓட்டுக் கூரையின் ஒரு பகுதி தூக்கி வீசப்பட்டது. இந்த கட்டிடத்திற்கு அருகில் வலி.மேற்கு பிரதேச சபையால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மீன் சந்தைக் கட்டிடக் கூரையின் ஒரு பகுதி, நாராயணன் தாகசாந்தி நிலையத்தின் கூரையின் ஒரு பகுதி, இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஆகியன சேதத்துக்குள்ளாகின.
இந்த அனர்த்தத்தை பொன்னாலை கிராம சேவையாளர் ப.தீசன், மூளாய் கிராம சேவையாளர் ஆர்.சிறீரஞ்சன் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Related posts: