மானிட பண்பியல்புகளை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கொரேனா புகட்டியுள்ளது – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021

பன்மைத்துவத்தை புரிதலுடன் ஏற்று நாம் வாழும் கூட்டிருப்பே மானிடத்தின் அர்த்தம் என்பதை கோவிட் பரவல் உணர்த்தி நிற்கின்றது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் நிலையான வளர்ச்சி என்பது – அந்த நாட்டில் வாழும் தனிமனிதர்கள் மற்றும் சமூகங்களுக்கு இடையே – மன்னிப்பு, இரக்கம் சகிப்புத்தன்மை என்பவற்றின் அடிப்படையிலான சமாதானம் நிலைநாட்டப்படுகையிலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது.

சமூகத் தலைவர்களும் அரசியற் செயற்பாட்டாளர்களும் கருத்துருவாக்கிகளும் – எமது நாட்டின் குடிமக்களிடையே இந்த மனப்பாங்குகளை வளர்த்து, நிலைத்த நல்லிணக்கமும் பொருளாதாரச் செழிப்பும் எமது நாட்டில் ஏற்படுவதற்குப் பாடுபட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று “சமாதானத்துடன் ஒன்றித்து வாழ்வதற்கான அனைத்துலக நாள்” குறித்த நாளை முன்னிட்டு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

மனிதர்கள் ஆகிய நாம் எமக்கு இடையேயான வேறுபாடுகளை ஏற்று அங்கீகரித்து, கூட்டிருப்பாய் வாழ்ந்து ஒன்றித்துச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையே இந்த நாள் நினைவூட்டி நிற்கின்றது.

தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நோய்த்தொற்று பரவல் ஒன்றினை மனித குலம் எதிர்கொண்டுநிற்கும் இன்றைய காலகட்டமானது – அடுத்தவர்களை கிரகித்து, உள்வாங்கி, கருத்துக்களை மதித்து, பாராட்டி, உணர்வுகளைப் புரிந்து, வேறுபாடுகளை அங்கீகரித்து வாழும் உயரிய மானிட பண்பியல்புகளை எமக்குள் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதனையே எமக்குப் புகட்டி நிற்கின்றது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: