போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை!

Thursday, February 21st, 2019

போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலான இடைக்கால கட்டுப்பாட்டு சபை ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்த ஜனாதிபதி, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கான அதிகார சபையை நிறுவுவதற்கான ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த அதிகார சபையை சட்ட ரீதியாக ஸ்தாபிக்கும் வரை காலந்தாழ்த்தாமல் எதிர்பார்த்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த இடைக்கால கட்டுப்பாட்டு சபையை அமைப்பதற்கு நேற்று (20) ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த அதிகார சபையினூடாக எதிர்காலத்தில் ஜனாதிபதி செயலகம், சுகாதார அமைச்சு, கல்வியமைச்சு மற்றும் பொலிஸார் ஆகிய நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குழுவின் கட்டமைப்பு தொடர்பிலான பரிந்துரைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை துரிதமாக ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், இலங்கையில் குறித்த அதிகார சபையை நிறுவும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்காலங்களில் போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்ப்படுத்தவுள்ளதாகவும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Related posts: