யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் – பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022

யுக்ரைனின் மரியபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.

அத்துடன் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

யுக்ரைனின் மரியபோல் துறைமுக நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, அங்கிருந்து இடம்பெறும் மின்சாரம், உணவு, நீர் மற்றும் போக்குவரத்து சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறும் வரை மட்டுமே இந்த போர் நிறுத்தம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக தாக்குதல்களை முன்னெடுத்து வந்தது.  இருதரப்பு மோதலில் பல உயிர்ச் சேதங்கள் இடம்பெற்றுள்ளன.

யுக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

யுக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கடும் சவால்களை கடந்து அண்டை நாடுகளுக்கு யுக்ரைனில் இருந்து பலர் நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில், மீட்பு பணிக்காக யுக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு மூலம் யுக்ரைனில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 11.30 இலிருந்து போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை, போர் நிறுத்தம் குறித்த யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இரண்டு கட்டங்களாக பெலாரஸில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: