பொதுப்போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

தென்னிலங்கைக்கு பொதுப்போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுவதாக சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தருவோரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பெருமளவானோர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை தகவல்கள் குறிப்பிட்டன.
தென்னிலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றன என்றும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதேவேளை வடக்கு மாகாணத்திலிருந்து பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி கொழும்பு சென்று திரும்புவோரில் பலர் காய்ச்சலுடன் மருத்துவமனைகளுக்கு வருகைதரும் நிலையில் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்படுகின்றது.
எனவே பொதுமக்கள் தேவையற்று கொழும்பு செல்வதையோ அல்லது பொதுப்போக்குவரத்தை தேவையின்றி பயன்படுத்துவதையோ தவிர்ப்பது மீண்டுமொரு கொரோனா அலையை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கண்டறியப்படும் கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடுத்து மருத்துவமனையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலை மருத்துவமனை நிர்வாகம் ஒழுங்கு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|