பெண் பிரதிநிதித்துவத்தை பெயரிடாத அரசியல் கட்சிகளின் பெயர்கள் வர்த்தமானியில் வராது!

Saturday, March 3rd, 2018

நிர்ணயிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதித்துவத்தை பெயரிடாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உள்ளராட்சி சபைகளில் நியமிப்பது கட்டாயமானதாகும். இந்த நிலையில், அரசியல் கட்சியோ அல்லது சுயாதீன குழுவோ, கட்டாயமாக்கப்பட்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தை நியமிக்காவிட்டால், அவற்றின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு கட்சியினாலோ அல்லது சுயாதீன குழுவினாலோ ஆறு பேரின் பெயர் அனுப்பப்படும்போது, நான்கு பெண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

எனினும், இதன்போது, குறித்த தரப்பினரால், 3 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்குமாயின், 3 பெண்களின் பெயரையும், ஆண்களின் மூன்று பேரில் பட்டியலில் முதலில் உள்ள இருவரின் பெயர்கள் மாத்திரமே வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் பெயர் வெற்றிடமாக வைக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பெயரிடப்படவேண்டிய எண்ணிக்கையை பெயரிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய முறைமையின் காரணமாகவே சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவற்றைத் தீர்க்க சில காலம் எடுக்கும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Related posts: