பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உதவியுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, August 29th, 2022

ஐரோப்பிய ஒன்றியம், யுனிசெஃப் அமைப்பு மற்றும் நியூசிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3000 தொன் துவரம் பருப்பு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.

1700 தொன் டின் மீன் கிடைக்கப்பெறவுள்ளது. அதன் முதற்கட்டம் கிடைக்கப் பெற்றுள்ளது. ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ அமைப்புடன் கல்வி அமைச்சின் போஷாக்கு வேலைத்திட்ட பிரிவு ஒன்றிணைந்து பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

ஆரம்பப் பிரிவில் 16 இலட்சத்து 40 000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

இதற்கு முன்னர் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படாத பாடசாலைகளிலும் அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் , அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதுவர்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக ஐரோப்பிய ஒன்றியம், யுனிசெஃப் அமைப்பு ஆகியவற்றுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான சகல தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பாடசாலைகளில் அதிகளவான மாணவர்களும் , ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை பரந்தளவில் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: