பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Sunday, November 5th, 2023

எதிர்வரும் ஆண்டிற்குள் இலங்கை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு டி. எஸ் சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவையின் தரம் iiiக்கு 4672 புதிய அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்து நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” கல்வித்துறையில் நிலவும் வெற்றிடங்களை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பேணுவதற்கு அவற்றை நிரப்புவது இன்றியமையாதது ஆகும்.

தற்போது கல்வி நிர்வாக சேவையில் 808 வெற்றிடங்கள் காணப்படுகிறது, அதில் 50 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு திறைசேரி அனுமதியளித்துள்ளது. அதன்படி, குறித்த 404 வெற்றிடங்கள் வெகு விரைவில் பூர்த்தி செய்து தரப்படும்.

இதேநேரம் கவுன்சிலிங் சேவையில் இருக்க வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை 4200 ஆக காணப்பட்ட போதிலும் தற்போது கிட்டத்தட்ட 1100 பேர் மாத்திரமே சேவையில் உள்ளனர்.

அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்விச் சேவையில் 1800 அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 800 அதிகாரிகளுக்கு மேல் இல்லை. எதிர்காலத்தில் 707 அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற இந்த அதிபர்கள் எதிர்நோக்கும் சவால்கள், சில வருடங்களுக்கு முன்னர் அதிபர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் மற்றும் சவால்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை.

விரைவில் இந்த அதிபர்கள் டிஜிட்டல் முறைமை மூலம் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளின் தேவைகளை சரியாகக் கண்டறிந்து அவர்களுக்கான பாடசாலையை தயார்படுத்த வேண்டும்.

அண்மையில் அவர்களுக்கென வழங்கப்படும் பயிற்சியில் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பயிற்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இவ்வருடம் அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது பாடப்புத்தக விநியோகம், சீருடை விநியோகம் என பல விடயங்களில் சவால்கள் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளில் மதிய உணவை அனைத்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கும் வழங்க திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி கட்டணத்தை 50 வீதத்தால்அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தற்போது தகவலொன்று பரவி வரும் நிலையில் கல்வி அமைச்சு மூலம் அவ்வாறானதோரு தீர்மானம் ஒரு போதும் வழங்கப்படவில்லை.” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: