பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் உல்லாசப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது கட்டுநாயக்க விமான நிலையம் !

Thursday, January 21st, 2021

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் உல்லாசப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.

முன்பதாக இலங்கையின் சர்வதேச விமான நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி கொரோனா அச்சதம் காரணமாக மூடப்பட்டது.

இந்நிலையில் அரசாங்கம் மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி அவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அத்தோடு சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனையடுத்து அவர்கள் இங்கு வந்ததும் மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு அழைத்து வரும் முன்னோடி நடவடிக்கையாக உக்ரைனிலிருந்து முதற்கட்டமாக சுற்றுலாப்பயணிகள் மத்தள விமான நிலையத்தினூடாக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நடைமுறையிலுள்ள சட்டங்களில் தளர்வுகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதேவேளை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்காக 50 ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இந்த ஹோட்டல்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு உள்ளூர் உல்லாசப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அனைத்து ஹோட்டல்களும் கொழும்புக்கு வெளியேயுள்ள பிரதேசங்களிலுள்ளவை என்றும் அவை சினமன், தாஜ், ஜெட்வின், ஷிட்ரஸ், அமாயா, மற்றும் ஷெரடன்ஸ் ஹோட்டல் வலையமைப்புக்கு உட்பட்ட ஹோட்டல்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது..

அத்துடன் ஹோட்டல் பகுதியை அடுத்துள்ள மக்கள் ஹோட்டல் பிரதேசத்திற்குள் பிரவேசிக்காத வகையில் அதனை அண்டிய கடற்கரை பகுதிகளில் வேலிகளை அமைப்பதற்கும் மேற்படி அதிகார சபையினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகள் இந்த ஹோட்டல்களில் 14 தினங்கள் கண்டிப்பாக தங்கியிருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 55 ஹோட்டல்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்தவையென தெரிவு செய்யப்பட்டு அவை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: