நாட்டில் உருவாகும் மற்றொரு ஆபத்து – மக்களை எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!

Friday, October 2nd, 2020

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு ஆபத்து அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் அனுரா ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அனுரா ஜெயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “டெங்கு பரவுவதற்கான நிலைமை ஆபத்தானது அல்ல என்றாலும், வரும் மாதங்களில் மழை நிலைகள் தீவிரமடைந்து வருவதால் டெங்கு ஆபத்து அதிகரிக்கும்.

எனவே மக்கள்,  தங்களை சுற்றியுள்ள சூழலை சுத்தமாக எந்நேரமும் வைத்திருக்க வேண்டும்.  மற்றும் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் வகையில் காணப்படும் பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்து அவதானமாக இருக்க வேண்டும்.

தொற்றுநோயியல் பிரிவு புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல்  இதுவரை 27,733 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11,608 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். மேற்கு மாகாணத்தில் 8,014 பேர் டெங்கு நோயர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில்  முறையே 3,947,  2,420 மற்றும் 1,647 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில்  இதுவரை 30 டெங்கு தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: