நாட்டின் முன் எத்தகையச் சவால்கள் இருந்தாலும், கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021

நாட்டின் முன் எத்தகையச் சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவற்றில், புனித தந்த தாதுவுக்காக நடத்தப்படும் புனித கிரியைகளுக்கு முதலாவது இடம் வழங்கப்படும் மரபு, பழங்காலத்திலிருந்தே ஆட்சியாளர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா, இம்முறையும் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டு நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில், கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் முக்கியமான கலாசார விழாவாகக் கருதப்படும் கண்டி எசல பெரஹரா, பண்டைய பாரம்பரியங்களைப் பேணி வெற்றிகரமாக நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில், எசல பெரஹரா சந்தேஷப் பத்திரம், தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால். ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெரஹராவில் சென்ற யானைகளுக்குப் பதிலாக, பந்தா எனும் யானைக்கு, ஜனாதிபதியினால் பழங்கள் வழங்கப்பட்டன.

தொற்றுநோய் நிலைமைகள் இருந்தபோதிலும், 1711ஆவது பெரஹரா நிகழ்வை நடத்தி, எதிர்கால சந்ததியினருக்கு எமது கடந்தகாலப் பொறுப்புகளை எடுத்துக்காட்ட முடிந்துள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புனித தந்ததாதுவுக்காகச் செய்யப்படும் அர்ப்பணிப்புகளை, நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் செய்யும் அர்ப்பணிப்புகளாகவே கருதுவதாகவும், ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்

Related posts: