நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதிகளை வழங்க விஷேட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு ஆலோசனை!
Thursday, June 8th, 2023சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களைத் தடுப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
வங்கிகளுடன் கலந்துரையாடி திட்ட அறிக்கைகளை வழங்கியுள்ள உற்பத்திக் கைத்தொழில் துறையினருக்கு உடனடியாக வசதிகளை ஏற்படுத்துமாறு அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
இந்நாட்டின் கைத்தொழில்களில் பெரும் முன்னேற்றத்தை காண இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, கடந்த ஆண்டில் (2022) வரலாற்றில் அதிகபட்ச ஏற்றுமதி வருமானமான 13.1 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது என அவர் குறிப்பிட்டார். மோட்டார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பொருத்தும் 22 கைத்தொழில்கள் இந்நாட்டில் தற்பொழுது காணப்படுவதாகவும், இனங்காணப்பட்ட 20 கைத்தொழில் துறைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் கூறினார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணம், மற்பாண்டம், மரமுந்திரிகை, பிரம்பு, மூங்கில் போன்ற பல்வேறு கைத்தொழில் துறைகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
குறித்த இந்த விடயம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|