தாண்டிக் குளத்தில் பொருளாதார வலயம் அமைக்கப்படுவது பொருத்தமற்றது:    பேராசிரியர் ப.சிவநாதன்!

Saturday, June 11th, 2016

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன் மொழிவிலே வடமாகாணத்துக்கு இரண்டு பொருளாதாரத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்று புதிய பொருளாதார வலயமொன்றை வவுனியாவில் ஆரம்பிப்பதும் , வடக்கிலே காரைநகர், வல்வெட்டித்துறை போன்ற பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை நிர்மாணிப்பது தொடர்பிலும் அரசாங்கம் இரண்டு திட்டங்களை முன்வைத்தது.

இந்த இரண்டு திட்டங்களும் பிரதேச அபிவிருத்தி என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டாலும் அந்த இரண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப் போகின்ற இடம் சார்பாக இந்தப் பிரதேச மக்களிடமிருந்தோ, மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தோ எந்தக் கருத்துக்களும் அறியப்படவில்லை.

இறுதியாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி தாண்டிக் குளத்தில் பொருளாதார வலயம் அமையும் என்ற கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. அந்த இடம்  உண்மையில் எங்களுக்குப் பொருத்தமற்றது. ஏனெனில் வவுனியா நகர எல்லையியிலிருந்து  இரண்டு  கிலோ மீற்றர் தூரத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசம் ஏற்கனவே விவசாயப் பண்ணையையும், விவசாயக் கல்லூரியையும் கொண்டதொரு இடமாகவே காணப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் யாழ். பல்கலைக் கழகப் பேராசிரியர் ப.சிவநாதன்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (05-06-2016) நண்பகல் யாழ்ப்பாணம் றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலா முற்ற மண்டபத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

140 ஏக்கர்  நிலம் 1947 ஆம் ஆண்டிலிருந்து விவசாயப் பண்ணையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை யாவரும் அறிவர். அதில் 35 ஏக்கர் நிலப்பரப்பு 1989 ஆம் ஆண்டிலிருந்து விவசாயக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு விவசாயக் கல்லூரி திறம்படச் செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே.  வடமாகாண விவசாய முன்னேற்றத்திற்குப் பல சேவைகளை இவையிரண்டும் ஆற்றி வருகின்றன. குறிப்பாக வடமாகாண விவசாயிகளுக்குத் தேவையான விதை இனங்களைப் பாதுகாத்து அந்த விதை இனங்களை வழங்கி வந்திருக்கிறது. இந்த விவசாயக் கல்லூரி புதிய பயிரினங்களை அறிமுகப்படுத்துவதுடன் பழைய பயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.நீண்ட காலம் எங்களின் காலநிலைக்கும், மண் வளத்திற்கும் ஏற்ப பயன்படுத்தப்பட்டு வந்த விதை நெல்லும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எங்களின் பழ மரங்களில் கறுத்தக் கொழும்பான், செம்பாட்டான் போன்ற பழவகைகளும் பாதுகாக்கப்படுகின்றன. தாண்டிக் குளத்தில் தற்போது பொருளாதார வலயம் அமைந்தால் இந்த இரண்டு மையங்களினதும் செயற்பாடுகள் பாதிக்கப்படும். இதுவரை காலமும் விவசாயிகளுக்குத் துணையாகவிருந்த அந்தப் பிரதேசம் சீரழிந்து போவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

ஐந்து ஏக்கர் நிலப் பகுதி போதுமெனக் குறிப்பிடப்பட்டாலும் அது தாண்டிக் குளத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. வடமத்திய மாகாணத்திற்கு ஒரு பொருளாதார வலயம் அமைக்கப்பட வேண்டி ஏற்பட்ட போது தம்புத்தேகம பகுதியில் அமைத்து ஒரு உப நகரமாக வளர்ச்சியடையச் செய்திருக்கிறார்கள்.  மத்திய மாகாணத்தில் ஒரு பொருளாதார வலயம் அமைக்கப்பட வேண்டி ஏற்பட்ட போது தம்புள்ளையில் அமைக்கப்பட்டு அதுவொரு உபநகரமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஏன்? வவுனியா நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றரில் வவுனியாவிற்கான  பொருளாதார வலயம் அமைக்கப்பட வேண்டும்? உண்மையில் இந்த முடிவு முற்றிலும் தவறானது. பொருளாதார வலயம் அமைக்கப்படும் போது மேலும் பொருளாதார நடவடிக்கைகளை விஸ்தரிக்கக் கூடிய நிலை காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts: