தொடரும் சீரான மழை வீழ்ச்சி – நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் உயர்வு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Tuesday, April 12th, 2022

மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மழை காரணமாக காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, கொத்மலை, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும்  சமனலவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் வரட்சியான காலநிலை நீடித்ததால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் நீர் மின்உற்பத்தி தடைப்பட்டது. மின்வெட்டுக்கு இதுவும் காரணமாக அமைந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இருந்தாலும் இது போதுமானதாக இல்லை என மின்சார சபை அறிவித்துள்ளது. தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை புத்தாண்டு வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சிபெட்கோ, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில்  இன்றுடன் 3  தினங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக, கலன்கள் மற்றும் பீப்பாய்களில் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு மண்ணெண்ணெய்  விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: