பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்து பகிடிவதையை இல்லாதொழிப்பேன் – கல்வி அமைச்சர் நம்பிக்கை!

Thursday, December 10th, 2020

நாட்டில் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தே பகிடிவதையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் எந்த சந்தேகமும் பயமுமின்றி நமது பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கான சிறந்த சூழல் கட்டியெழுப்பப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முறையாக முன்னெடுத்துச் செல்லும் வகையில் சிறந்த சூழலை கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழக மாணவனுக்கு அவரது எதிர்கால கல்வி நடவடிக்கைகளுக்காக புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மாணவர்களின் முழு வாழ்க்கையையும் சீரழித்து வாழ்க்கை முழுவதும் நோயினால் பாதிக்கப்பட்டு துயரப்படும் நிலையை உருவாக்கும் பகிடிவதையை ஆதரிக்கும் மனநிலையிலுள்ள விரிவுரையாளர்களும் உள்ள நிலையிலேயே அதனை முற்றாக ஒழிப்பதற்கு கடினமாக உள்ளது. அந்த நிலையை மாற்றி அனைவரதும் ஒத்துழைப்புடன் பல்கலைக்கழக கட்டமைப்பிலிருந்தே பகிடி வதையை இல்லாதொழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: