தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத 28 மருந்துகளை எடுத்துவர சுகாதார அமைச்சர் இந்தியா பயணம்!

Thursday, December 22nd, 2022

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் (என்.எம்.ஆர்.ஏ.) பதிவு செய்யப்படாத 28 மருந்துகளை இந்திய நிறுவனம் ஒன்றிடம் இருந்து, உரிய கொள்முதல் நடவடிக்கைகளைப் பின்பற்றாது இறக்குமதி செய்வதற்கு சுகாதார அமைச்சு, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள 46 மில்லியன் அமரிக்க டொலரை பயன்படுத்தி  இந்த மருந்துகள்  தருவிக்கப்படவுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம்  25 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,  அமைச்சர்வைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரம் பிரகாரம்,  அத்தியவசிய மருந்துகள் 151,  சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட 5268  நுகர்வுப் பொருட்கள்,  850 இரசாயன பதார்த்தங்கள்,  எக்ஸ் கதிர்வீச்சுடன் தொடர்புபட்ட பரிசோதனைக்கு அவசியமான 18  வகை பொருட்கள் கையிருப்பில் இல்லை என  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனூடாக மருந்து பற்றாக்குறை அடுத்து வரும் வாரங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.  அதன்படி இந்தியாவின்  நிறுவனம் ஒன்று 3 மாதங்களுக்கு மருந்துகளை விநியோகிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக்கு  கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

எனினும் 3 மாதங்களுக்கு மருந்து விநியோகத்துக்கு  பரிந்துரைக்கப்பட்ட நிறுவனம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டதல்ல என தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நிறுவனம் மருந்து விநியோகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முறைமை தொடர்பிலும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

வேறு நிறுவனங்களில் இருந்து கொள்வனவு செய்யவும் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில்,  குறித்த நிறுவனத்தின் மருந்துகளை இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபணம் அங்கீகரித்துள்:ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் மருந்துகளின் பயன்பாடு தொடர்பில் அனுமதி வழங்கும் அதிகாரம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கே உள்ளது.

இந் நிலையில் 3 மாதங்களுக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய பரிந்துரைக்கப்பட்ட விநியோக நிறுவனத்திடமிருந்து மருந்துகள்  அத்தியவசிய  அடிப்படையில் கொள்வனவு செய்யப்படுவதால் அதன் அனுகூலத் தன்மை தொடர்பில் ஆராய வேண்டும் என நிதி அமைச்சு  தனது மேற்பார்வை குறிப்பில் பதிவிட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ஒக்டோபர் அமைச்சர்வை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் டிசம்பர் 5 ஆம் திகதி மற்றொரு பத்திரத்தை அமைச்சர்வைக்கு சமர்ப்பித்துள்ளார்.

மற்றொரு இந்திய நிறுவனத்திடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த அமைச்சர்வை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்திடமிருந்து 28 வகை மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இந்த நிறுவனத்தின் மருந்துகளும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் அங்கீகரம்  வழங்கப்பட்டவை அன்று.

இந் நிலையில்  தமது நிறுவனத்தை மேற்பார்வை செய்ய வருமாறு  சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு குறித்த இந்திய நிறுவனம் கடந்த 17 ஆம் திகதி அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று 21 ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய  மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோர்  மருந்தாளர்கள் எவரும் இன்றி இந்தியா நோக்கி சென்றுள்ளனர்.

இந்த பயணத்துக்கான அனைத்து  செலவுகளையும் குறித்த இந்திய நிறுவனம் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்த...
கிளிநொச்சி மாவட்ட கிராமசேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன நடவடிக்கை...
தவறான தகவல்களைப் பரப்பி மக்களை குழப்பி வரும் சிலர் - தமது தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலுக்காக மக்களை தூண்ட...