தீக்காயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண் பலி !

Friday, February 2nd, 2018

தீப்பற்றிய மண்ணெண்ணெய் அடுப்பை அணைக்க முற்பட்டபோது உடலில் தீப்பற்றி தீக்காயங்களுக்குள்ளான இளம் குடும்பப் பெண் ஒருவர் ஒரு மாதத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி இமயாணன் பகுதியைச் சேர்ந்த மனோரஞ்சன் சிந்துஜா (வயது – 22) என்ற பெண்ணே மேற்படி உயிரிழந்தவராவார்.

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் குறித்த பெண் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு சாப்பாடு செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். பின்னர் அடுப்பு எரிந்து கொண்டிருந்த போது அடுப்பினுள் மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளார். அப்போது அடுப்பு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

அதை அவர் தனது வாயால் ஊதி அணைக்க முற்பட்ட போது அவருடைய நெஞ்சில் தீப்பற்றி எரிந்துள்ளது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் அவ்விடத்துக்கு வந்து அவரை மீட்டு உடனடியாக 8.30 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அன்றைய தினமே இரவு 10.30 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: