தனிமைப்படுத்தலுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நட்சத்திர விருந்தகங்கள் தொடர்பில் அவதானம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 12th, 2021

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்படும் சில விருந்தகங்களில் அதிகளவான தொகை அறவிடப்படுமாயின் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் அவர்கள் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்படும் குறித்த காலப்பகுதிக்கு மாத்திரம் அதிகளவான தொகை அறவிடப்படுவதாக சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாளாந்தம் 2 ஆயிரம் பேர் வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு வருகை தரும் இலங்கையர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தனிமைப்படுத்தும் காலப்பகுதிக்கு மேலதிகமாக கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதற்கமைய குறித்த சில நட்சத்திர விருந்தகங்களில் நாள் ஒன்றுக்கு தனிநபர் ஒருவர் மாத்திரம் தங்கக்கூடிய அறைக்கு 170 முதல் 230 அமெரிக்க டொலர் வரைஅறவிடப்படுகின்றமை தெரியவந்துள்ளது இது . இலங்கை ரூபாவில் சுமார் 34 ஆயிரம்  தொடக்கம் 44 ஆயிரம் ரூபா வரை பெறுமதியாகும்.

அதேநேரம் குறித்த விருந்தகங்களில் இரண்டு பேர் தங்கக்கூடிய ஒரு அறைக்கு நாளாந்தம் 210 முதல் 265 அமெரிக்க டொலர் வரை அறவிடப்படுகின்றது. இது இலங்கை ரூபாவில் 52 ஆயிரம் வரையான பெறுமதியாகும்.

இது தவிர கொரோனா பரிசோதனைகளுக்கு 40 அமெரிக்க டொலரும், காப்பீட்டு தொகையாக 12 அமெரிக்க டொலரும் விமான நிலைய போக்குவரத்து கட்டணமாக 55 டொலரும் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த விடயத்தில் தமது தரப்பிலிருந்து மேற்கொள்ள கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: